36 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் மீண்டும் தனது சொந்த இடத்தில் கல்வி கல்வி நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பாடசலையானது 1962 ஜூலை 23ஆம் ஆண்டு அரச வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரசாங்க பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,1978ம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக பாதிப்பட்டதையடுத்து பாடசாலை தற்போதுள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் 1979ம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில்,1990ம் ஆண்டில் பாடசாலை பூமியானது பாதுகாப்பு தரப்பினரின் முகாமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்காக கையகப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு தரப்பினர் கையகப்படுத்திய காலப்பகுதியில், இப்பாடசாலை தற்காலிகமாக வந்தாரமூலை மத்திய கல்லூரி, தேவபுரம் கஜமுகன் வித்தியாலயம் மற்றும் பல தனியார் இடங்களில் நடாத்தப்பட்டன. இதையடுத்து பிரதேச மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இப் பாடசாலை மீள ஸ்தாபிக்கப்பட்டது. எனினும், தற்போது குறித்த பாடசாலையானது வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுவதுடன், கல்வி நடவடிக்கைகளுக்காக இடவசதிகள் இன்மையினை சந்தித்தது.

இவ்வாறான நிலையில்,பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட குறித்த பாடசாலை வளவானது கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர்களில் 100×20 அடி அளவிலான இரு கட்டிடங்களும், 150×20 அடி அளவிலான கட்டிடமொன்றும், 40×20 அடி அளவிலான கட்டிடமொன்றும் காணப்பட்ட நிலையில் கடந்த 10ம் திகதி கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, அதிபர் மா.தவனேஷ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


















