-ரவிகரன் எம்.பி.யிடம் பூதன்வயல் கிராம மக்கள் கோரிக்கை-
-வி.சரவணன்-
மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பது உள்ளிட்ட மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயற்படுமாறு முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று, மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள பூதன்வயல் கிராம மக்கள் துரைராசா ரவிகரன் எம்.பி.யிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் நேற்று ரவிகரன் எம்.பி. நடத்திய குறைகேள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன் பொது மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் தற்போது காட்டுயானைகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்த பூதன்வயல் மக்கள் தமது கிராமத்திற்கு அதிகளவான வீதி விளக்குக்களைப் பொருத்துவதுடன், யானைவேலி அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ரவிகரன் எம்.பி.யிடம் கோரினர்.
அத்துடன் பூதன்வயல் கிராமத்திலிருந்து மதவளசிங்கன் குளம் வரையில் 3.7கிலோமீற்றர் தூரத்திற்கு பிரதான மின்னிணைப்பு இன்மையால் அந்தப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மதவளசிங்கன் குளத்தில் நன்நீர் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் என பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டுவருவதாக சுட்டிக்காட்டியதுடன், பூதன்வயல் கிராமத்திலிருந்து மதவளசிங்கன்குளம் வரையில் பிரதான மின்னிணைப்பைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டது.
மேலும் பூதன்வயல் பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகளைச் சீர்செய்தல், பூதன்வயல் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகளின் சீரமைப்பு, வாய்க்கால் சீரமைப்பு, மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிப்புச்செய்தல், காணியற்ற விவசாயிகளுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுத்தல், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல், கமவீதிகளைச் சீரமைப்புச்செய்தல், சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள கம வீதிகளை விவசாயிகளின் பாவனைக்காகத் திறந்துவிடுதல், உள்ளிட்ட கோரிக்கைகளும் புகிராம மக்களால் ரவிகரன் எம்.பி.யிடம்; முன்வைக்கப்பட்டது.
இதேவேளை உங்களது முயற்சியால் மதவளசிங்கன்குளத்தின் கீழான களமோட்டைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கான பாலமும், நெற்பிலவிற்குச் செல்வதற்கான பாலமும் இவ்வருடம் அமைக்கப்படவுள்ளமைக்கு கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் ரவிகரன் எம்.பி.க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமென ரவிகரன் எம்.பி. தெரிவித்தார்.


















