முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய 26 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் மந்துவில் சந்தி வளாகத்தில் நேற்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட 24 பொதுமக்களுடைய வலிதீரா நினைவுகள் இறந்தவர்களின் உறவுகளாலும், மக்களாலும் சுடரேற்றி, மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் தலைவர் த.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.யூட் பிரசாத், தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


















