மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமைபொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மீட்டியாகொடை மாவத்தகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடொன்றினைச் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கான 6 தோட்டாக்கள், 13 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.
மேலும் அதே வீட்டிலிருந்த மற்றொரு நபரும் 14 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதானார். குறித்த சந்தேகநபர்கள் இருவரும், கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியவருமே கைதாகியுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


















