மன்னார் – புத்தளம் பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை இந்த அரசாங்கம் செய்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்
பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மன்னார்- புத்தளம் பாதையை நான் அமைச்சராக இருந்த பொழுது மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தேன்.
2009 ஆண்டின் பின்னரே குறிப்பாக மறிச்சுக்கட்டி, காரடிக்குழி, பாலக்குழி, பெரியமாடு, முள்ளிக்குளம் மக்கள் தமது பகுதிகளில் மீள் குடியேறச் சென்றனர். அவ்வாறு செல்லுகின்ற பொழுது, பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த பெரியமடு, மரிச்சுக்கட்டு, பாலக்கூலி, கரடிக்குழி, முள்ளிக்குளம், கொண்டச்சி, அளக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகள் வன வள திணைக்களத்திற்கு கீழ் 2012 ஆண்டு அந்த மக்களுக்கே தெரியாமல் அன்றிருந்த அரசாங்கம் இரகசியமாக வர்த்தமானி அறிவித்தல் செய்து கையகப்படுத்தியது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்த பொழுது மன்னாரோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் மன்னாருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டங்களை செய்து என்னை ‘ஒரு காடுகளை அழிக்கின்ற’ ஒருவராக காட்டுகின்ற, ஒரு மோசமான ஒரு இனவாத செயலைச் செய்தனர்.
அதையெல்லாம் தாண்டி அம்மக்களை நான் குடியேற்றினேன். அவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த மன்னார்-புத்தளம் பாதையை மூடுமாறு மேல் மாகாணத்தில் இருக்கின்ற, அந்த பாதைக்கு, சம்பந்தமில்லாத ஒரு சில சிங்கள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த அரசாங்கத்துக்கு முன்னர் இருந்த அனைத்து ஆட்சியாளர்களின் அமைச்சின் திணைக்களங்கள் மக்களுக்கு சார்பாகவே இருந்தனர்.
ஆனால் இன்று ஆட்சியிலுள்ள அமைச்சரின் கீழ் உள்ள வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பாதையால் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையிலான பயண தூரமும் மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடையிலான பயண தூரமும் 100 கி.மீ குறைவு படுகின்றது. ஜனாதிபதியாகியதும் இந்த பாதையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனுரகுமார திஸ்ஸநாயக்க மீது, இனவாதம் இல்லாத ஓர் அரசாங்கம் என்றும், முஸ்லிம் சமூகத்தினர் ஜனாதிபதி அனுர மீது நல்லெண்ணம் கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த அரசாங்கம் இப் பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை செய்கின்றது என்றார்.


















