மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வந்த 34 பேர், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு மாற்றப்பட்டு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர்.
குறித்த நியமன கடிதங்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், நடுத்தர வர்க்கத்தில் உள்ள அரச ஊழியர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் மீது எமது அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறான மக்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றக் கூடிய திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் அதற்குரிய பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
உங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் நீங்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். அதில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் நீங்கள் பிரதேச செயலர் அல்லது பிரஜா சக்தி தலைவர்கள் ஊடாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லோருக்குமே இது ஒரு புதிய பணி. எந்த ஒரு விடயத்தையும் தனியாக முடிவெடுக்கும் போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றது. எனவே நீங்கள் குழுவாக சேர்ந்து செயற்பட வேண்டும்.
கடந்த அரசாங்கங்களின் காலங்களிலே வழங்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு ஒரு தொகுதி தான் சென்று சேர்ந்திருக்கிறது . டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வெளியிடப் பட்டிருந்த நாடுகளுக்கு இடையேயான ஊழல் சுற்றறிக்கையில் 121 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
121 வது இடத்திலே இருப்பதென்றால் எவ்வகையான ஊழல்கள் கடந்த காலங்களில் நடைபெற்றது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.எனவே ஊழல் மோசடிகளை எமது நாட்டில் இருந்து முற்றும் முழுமையாக துடைத்து எறிவதற்காக தான் இவ்வாறான திட்டங்களை எமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.


















