-அநுர அரசின் இலக்கும் அதுவே : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-
-இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்-
-2026 வரவுசெலவு திட்டத்தில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு ஒன்றுமில்லை-
மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கின் இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகளை நாம் எதிர்ப்போம் எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 5ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2026 வரவுசெலவுத் திட்டத்தில் வடக்கு தொடர்பில் எதுவுமில்லை.
35 வருடங்களாக வடக்கு, கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது, அந்த மாகாண மக்கள் பொருளாதார தடைகளுக்கு முகம்கொடுத்திருந்தனர். 2001ஆம் ஆண்டில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை 2000 ரூபாவாகவே இருந்தது. விடுதலைப் புலிகளை காரணம் காட்டி சாதாரண தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
இந்நிலையில் யுத்தத்திற்கு பின்னர். ஏதாவது அரசாங்கம் வடக்கு, கிழக்கை மற்றைய மாகாணங்களில் இருந்து வித்தியாசமானது என்பதனை ஏற்றுக்கொண்டதா என்றால் இல்லை. கடந்த அரசாங்கங்கள் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் பொருளாதார முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை. இந்த அரசாங்கம் அவ்வாறு அல்ல. மாற்றத்திற்காக வந்தவர்கள் என்றே பார்க்கப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பவர்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் எதையும் செய்யவில்லை.
கீழ் மல்வத்துஓயா திட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்ற திட்டமிடப்படுகின்றது. சிங்கள மக்கள் வட க்கு, கிழக்கில் வாழ்வதில் எங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. அவர்கள் எங்களுடன் ஒன்று சேர்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் இனப்பரம்பலை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளை எதிர்ப்போம். நான்கு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும்.
ஆனால் அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியில் ஒரு விமான நிலையத்திற்கு 250 மில்லியன் ரூபா போதுமா? யாழ்ப்பாண விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இது எந்த வகையில் போதுமானதாக இருக்கும்? 2500 வீடுகளை அமைப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு வீட்டுக்காக இரண்டு மில்லியன் ரூபா செலவாகும். இது வரவேற்கத்தக்கது. எனினும் இந்தியா 15000 வீடுகளை அமைப்பதற்கு தயாராக இருக்கின்றது. அது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். முறைமை மாற்றத்திற்காக அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் இடையிலான இடைவெளிகளை புரிந்துகொள்ள வேண்டும். அந்த மாகாணங்களை மற்றைய மாகாணங்களை விட விசேட சிறப்பு மாகாணங்களாக கருதாத வரையில் அங்குள்ள மக்களை இந்த நாட்டை விட்டு வெளியேற கூறுவதை போன்றே இருக்கும். அங்குள்ள மக்களை வெளியேறும் வகையில் நிலைமைகளை உருவாக் குவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இலங்கை உண்மையான அபிவிருத்தியை அடைய வேண்டுமென்றால் தென்னிந்திய பொருளாதாரத்தை இலங்கையுடன் இணைக்க வேண்டும்.
இதன்படி பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராக இருக்கின்றது. ஆனால் நீங்கள் அதற்கு தயாராக இல்லை. கடந்த அரசாங்கமும் இவ்வாறே நடந்துகொண்டது. டுபாய், சிங்கப்பூர் போன்ற இடங்களில் இருந்து விமானங்கள் வரும் வகையில் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனால் விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவியை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏன் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அந்த அபிவிருத்தியை தடுக்க வேண்டும்? பொருளாதார அபிவிருத்தியை செய்ய தென்னிந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பயணிக்க வேண்டும். அதற்காக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.


















