-யாழ். முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு-
புதிய சோனகதெரு 10ஆம் வட்டாரத்தில் வெள்ள வடிகால் மழை நீர் வழிந்தோட முடியாத வகையில் குடியிருப்பாளர்கள் சிலரால் தடைகள் போடப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக வட்டாரத்தின் இரு உறுப்பினர்களினாலும் கடந்த செவ்வாய்க்கிழமை கடந்த சபை அமர்வில்வாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஆராயும் விசேட களவிஜயம் ஒன்றை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா கடந்த வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தார்.
இவ் விஜயத்தில் 10ஆம் வட்டாரம் மானிப்பாய் வீதியில் அமையப்பெற்றுள்ள பிரதான வீதியின் வெள்ள வாய்க்காலில் போடப்பட்ட தடை தொடர்பில் முதல்வர் ஆராய்ந்தார். ஒரு சிலர் குறித்த பகுதி வாய்க்கால் என்றும், சிலர் அது ஒழுங்கை என்றும் முதல்வருடன் வாதிட்டனர்.
குறித்த பகுதியில் வெள்ளம் தேங்கியிருந்த நிலையில் முதல்வர் அதனூடாக நடந்து சென்று அதன் தொடர் முடிவிடம் வரை ஆராய்ந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் உரிய துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வெள்ள நீர் வழிந்தோடக் கூடிய வகையிலும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
இந்நிலையில்,மழை வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய வகையில் தற்காலிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டார்.


















