மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் என்பதால் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் எம்.பி.யுமான கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 5ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய மேலும் இவர் தெரிவிக்கையில்:
நாம் ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் மாகாணசபை தேர்தலை நடத்துவோம் என்றே அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால் இப்போது வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கும் போது,மாகாணசபைகளுக்கான தேர்தலை எப்போது நடத்தப்போகின்றீர்கள் என எமது கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதியிடம் கேட்டபோது, மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ஒதுக்கி இருக்கிறேன். தேர்தலை நடத்தும் திகதியை என்னால் தீர்மானிக்க முடியாது. பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் இணைந்து அதற்கு சட்டம் ஒன்றை அனுமதிக்க வேண்டுமெனக் கூறுகின்றார்.
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் .எனவே மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயரை கேட்டுக்கொள்கிறோம். பழைய முறையிலாவது தேர்தலை நடத்தி, மாகாண சபையை அமைப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.














