-தேர்தலையும் உடன் நடத்துங்கள் என்கிறார் சிறிநாத் எம்.பி-
மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகக் கூறிவிடாது, ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 4 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைக் தெரிவத்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
”இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் பல நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக வரவு செலவில் துண்டுவிழும் தொகையை குறைப்பதற்கும் கையிருப்பை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலங்கள் உள்ளிட்ட சில விடயங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நன்றி கூறுகின்றோம்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அதாவது படுவான்கரை, எழுவான்கரை போன்ற பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புகள் இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கடல்வளத்தை அதிகளவில் கொண்டுள்ளது.
அங்கு கதிரவெளியிலிருந்து பெரிய கல்லாறு வரையில் பல மீன்பிடி துறைமுகங்களை அமைக்க வேண்டிய தேவைகள் உள்ளன. கடந்த காலங்களில் இது தொடர்பான முன்யோசனைகளை முன்வைத்துள்ளோம். இதன்படி வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மாவீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு அரசாங்கம் அனுசரணையாக இருக்கும் நிலையில் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் வணக்கம் செய்ய இம்முறை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.
இதேவேளை, அரசியலில் தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததைப் போன்று தமிழ்த் தேசிய உணர்வுக்காக எங்களுக்கும் வாக்களித்துள்ளனர். வடக்கு, கிழக்கில் அதிகளவான மக்கள் தமிழ்த் தேசியத்துக்காகவே வாக்களித்துள்ளனர்.
இதனால் இந்த அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாக கூறிவிடாது இதய சுத்தியுடன் ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்தி முடிப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கம் வகிக்கின்ற உங்கள் கட்சி முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.


















