மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலத்தை 2026.09.17 ஆம் திகதிவரை நீட்டிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது செயற்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை நீட்டிக்கும் யோசனையை முன்வைத்து உரையாற்றிய சபை முதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க,
மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையில் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான யோசனை கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 102 பிரிவின் பிரகாரம், இந்த செயற்குழுவின் காலத்தை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 2026.09.17 ஆம் திகதி வரை செயற்குழுவின் காலம் நீட்டிக்கப்படும் என்றார். இந்த யோசனைக்கு சபை அனுமதி வழங்கியது.
இதன்போது எழுந்து உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க , மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதாகவும், அதற்காக எதிர்க்கட்சியினர் தமது யோசனைகளை விரைவாக முன்வைக்க வேண்டும் என்று பிரதமர் இன்று குறிப்பிட்டார்.ஆனால் செயற்குழுவின் காலத்தை நீட்டிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இது முறையற்றது என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக, மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு ஒரு தீர்மானம் எடுப்பதற்காகவே பாராளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.
















