-நோக்கம் என்ன? சாணக்கியன் கேள்வி-
மகாவலி ‘கே’ வலயம் உருவாக்க திட்டம் தீட்டப்படுவதாக அறிகிறோம், அந்த வலயம் எங்கே உருவாக்கப்படவுள்ளது? அதற்காக பயன்படுத்தப்படவுள்ள நிலத்தின் அளவு என்ன? என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பல தசாப்தங்களாக, மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நில ஒதுக்கீடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட உள்ளுர் சமூகங்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் இன விகிதாசாரப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது என்றும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் அரச நிலங்களைப் பகிர்ந்தளிக்கும்போது தேசியஇன விகிதம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட நிலங்களின் அளவை இன ரீதியான விபரங்களுடன் தெரிவிக்கவும். மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மொத்த அளவு (ஏக்கரில்) எவ்வளவு? மேலும் தேசிய இனரீதியாக பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? மகாவலி ‘கே’ வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதுடன் இந்த ‘கே’ வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? என கேள்விகளை எழுப்பினார்.


















