பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்.
புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் நடைமுறையாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் உள்நோயாளிகளுக்கான சலுகை (அரசஃதனியார் மருத்துவமனை) 300,000 ரூபாவாகவும், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை 20,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடுமையான நோய்களுக்கான காப்புறுதி இப்போது 1.5 மில்லியனில் இருந்து ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காப்புறுதியில் இப்போது நிரந்தர ஊனத்திற்கு ரூபா 200,000, நிரந்தரப் பகுதி ஊனத்திற்கு ரூபா 150,000 மற்றும் தற்காலிக ஊனத்திற்கு ரூபா 100,000 வரை அடங்கும்.
ஆண்டுதோறும் ரூபா 240,000 க்கும் குறைவாக ( ரூபா 180,000 இலிருந்து ) வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆயுள் காப்புறுதி சலுகைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்கள் இறந்த பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூபா 75,000 பெறுவார்கள் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூபா 225,000 கிடைக்கும். கால்-கை வலிப்பு, சிறுநீரகச் சிதைவு நோய்க்குறி, முடக்கு வாதம், பெருங்குடல் அழற்சி, குடல் அழற்சி, நாள்பட்ட நோய் மற்றும் இதய வாத நோய் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இப்போது வெளிநோயாளர் சலுகைகளுக்குத் தகுதியுடையவர்கள்.
மேலதிகக் காப்புறுதியில் முதுகுத்தண்டு வளைவு ரூபா 75,000 மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் செவிப்புலன் கருவிகளுக்கு ரூபா 75,000 ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















