தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வட மாகாண ஆளுநரால் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றையும் நாம் விரைவுபடுத்தவும் வேண்டும்.
தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன்.
ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்ப்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள்.
இதேநேரம், யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன. இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார்.
இந்த நிகழ்வில் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


















