-பதில் வழங்க இரு வாரகால அவகாசம் கோரிய பிரதமர்-
-வி.சரவணன்-
இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்பாடுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பதிலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நேற்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவார கால அவகாசத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார். குறித்த மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 22.08.2025 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் கடந்த 02.12.2025 அன்று நாடாளுமன்ற சபை அமர்வில் குறித்த கேள்விக்கான பதில் வழங்கப்படுமென நாடாளுமன்ற அறிவித்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் அப்போது டித்வா அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் குறித்த தினத்தில் இந்தக்கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இத்தகைய சூழலில் குறித்த கேள்விகள் நேற்று பாராளுமன்ற சபை அமர்வில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் எடுத்துக கொள்ளப்பட்டபோதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவாரம் கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் துறை சார்ந்த அமைச்சர்களிடம் கேட்பதற்கென 30 கேள்விப் பத்திரங்கள் பாhளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


















