ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி கிராமிய கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தினர் குறித்த கட்டடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய கூட்டுறவு சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,
எமது சங்க கட்டடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5 வருடகால ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்தகாலம் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை.
வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80 பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம் ரூபா முற்பணமும், மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வாடகையும் தருவதாகவும் கூறினார்கள்.
நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம். ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால் புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய நிறுவனத்தின் வருகையால் எமது பகுதியில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கவுள்ளது. ஆனால் அதற்கு எல்லாம் வழிவிடாது, ஏதோ ஒரு பின்னணியை வைத்து அந்த நிறுவனம் வெளியேறாமல் இருக்கின்றது.
எமது அனுமதியின்றி எமது கட்டடத்திலும், கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலும் பல்வேறு விதமான வேலைகளை செய்கின்றனர். உள்ளே என்ன நடக்கின்றது என்று கூட எமக்கு தெரியவில்லை என்றனர்.


















