வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க வீடமைப்பு அதிகார சபையினால் வீடொன்றுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ. பீ. சரத் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாகவும், இந்த வீடுகளை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கைக எடுக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் இவ்வருடம் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளுக்கு அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடொன்றுக்கு இதுவரை காலம் 9 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி குறித்த பகுதி மக்கள் தொடர்பில் விசேட அவதானத்தை செலுத்தி வீடொன்றுக்கு 20 இலட்சம் ரூபாவை வழங்குமாறு கூறியுள்ளார். இதன்படி அந்தத் தொகை வழங்கப்படும்.
அத்துடன் அங்கு 2500 மீள்குடியேற்ற வீடுகளை 3 வருடங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கில் இந்தப் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு காணப்படும் என்றார்.


















