-முல்லைத்தீவு அரசாங்க அதிபர்-
-பா.சதீஸ்-
முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி வதந்தியெனவும், இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
முத்தையன்கட்டு குளத்தின் நிலைமைகளை நேரடியாக கண்காணிக்க மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அங்கு நேற்று விஜயம் செய்த நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகின் (னுனுஆஊரு) உதவி பணிப்பாளர்,
நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மற்றும் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஆகியோருடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடி தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தனர்.
முத்தையங்கட்டு குளத்தின் முழுக் கொள்ளளவு 24 அடியாகும்.தற்போது குளத்தின் நீர்மட்டம் 23.3 அடியாகவுள்ளது.குளத்தின் நீர் வழிந்தோடும்பகுதியில் கட்டமைப்பு சேதம் காணப்படுவதால்,
தற்போது அதிக நீர் இருப்பின் காரணமாக அங்கு கொன்கிரீட் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும், கனரக வாகனங்களை அந்தப் பகுதிக்கு கொண்டு செல்லவும் முடியாததால், நேற்றும் நேற்று முன்தினமும் திட்டமிடப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்வரும் மழையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ரேடியல் கதவுகள் மூலம் குளத்தின் நீர்மட்டத்தை 20 அடி வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கனமழை பெய்யும் சூழல் ஏற்பட்டால், வால் பகுதியை வெட்டி கூடுதல் நீரை வெளியேற்றும் மாற்றுத் திட்டமும் தயாராக உள்ளது.
தற்போது நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்து குளத்தை கண்காணித்து வருகிறது. எதிர்கால மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு அபாயத்தை குறைக்கும் நோக்கில் இந்த நீர்மட்டக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குளத்தின் கீழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்.முத்தையங்கட்டு குளத்தின் அணையில் எந்த பிரச்சினையும் இல்லை. பிரச்சினை நீர் வழிந்தோடும் பகுதியில் மட்டுமே உள்ளது. அது பெரிய அபாய நிலையை ஏற்படுத்தாது என்றார்.
















