திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் நேற்று வியாழக்கிழமை கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள் தாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களை இழந்ததால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
முத்துநகர் விவசாய நிலத்தில் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக அப்பகுதி குளத்தையும் மூடியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன் நெற்செய்கையும் நில இழப்பினால் பெரிதும் தாமதமாகியுள்ளது.
குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அரசாங்கத்திடம் பலமுறை தீர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும் அதுவும் நடக்கவில்லை.
இந்தநிலையில் மழையை கூட பொருட்படுத்தாமல் தஹரவட்டுவான் குளப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரதும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.


















