-வி.சரவணன்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணி இல்லாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டிய நிலையில், 2026 மார்ச் மாதத்திற்குள் காணிகள் வழங்கப்படும் என பிரதேச செயலர்கள் உறுதியளித்தனர்.
கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், மாவ ட்டத்தில் சுமார் 3,389 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. அவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். புதுக்குடியிருப்பில் 1500 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேசங்களிலும் காணியற்ற மக்கள் உள்ளனர். கரைதுறைப்பற்றில், 700 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளின்றி இருப்பதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே காணிகளுக்காக விண்ணப்பித்துள்ள எமது மக்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
காணிகளை வழங்கத்தவறினால், மக்களுடன் இணைந்து பிரதேச செயலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டிருக்கும். எனவே விரைவாக குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என கூறிப்பிட்டார்.
இந்நிலையில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காணிகளும் இனங்காணப்பட்டு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, காணியற்றவர்களுடைய பட்டியலை ஆராய்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன் காணிக்கச்சேரி நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.


















