-த.அம்பிகாவதி-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் மாதாந்த வருமானத்தை நிலையானதாக மாற்றுவதற்காக World Vision நிறுவனத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 11 குடும்பங்களுக்கு தலா 200,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவியாக மீன்பிடி உபகரணங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் ஆறுமுகத்தான்குளத்திலிருந்து 7 பயனாளிகளுக்கும் குமுழமுனை மத்தியிலிருந்து 4 பயனாளிகளுக்கும் குறித்த உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் World Vision நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், NAQDA அதிகாரிகள் மற்றும் கிராம மட்டத்திலான அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


















