முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரை வன நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவம் கையகப்படுத்தி உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச் செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரியிருந்தார்.
குறிப்பாக கடந்த வாரம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கேப்பாப்புலவில் 55 பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4 பேருக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக ; 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தார். இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5 ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திட்டமிட்டுள்ளார்.
அந்தவகையிலேயே கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள், ஆவணங்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.


















