-அமைச்சர் நளிந்த எச்சரிக்கை-
-எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் கோரிக்கை-
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அல்லது நீடித்தால் எதிர்வரும் மே மாதத்தில் தாங்க முடியாத அளவுக்கு எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் நளிந்த மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், மத்திய கிழக்கு மோதல் சூழல் மேலும் நீடித்தால் அல்லது தீஸ்ரீவிரமடைந்தால் உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் சடுதியாக உயர்த்தப்படும். அதனால், மே மாதத்தில் இலங்கையில் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே, மக்கள் தாங்களாக முன்வந்து எரிபொருள் பயன்பாட்டினை மட்டுப்படுத்திக் கொள்வது பொருத்தமானதாக அமையும், மேலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கப்பல்களுக்கான பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள் ளமை காரணமாக, இலங்கையின் எரிபொருள் விலையிலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
எதிர்கால நிலைமை குறித்து யாராலும் எதிர்வுகூற முடியாது. இருப்பினும், அடிக்கடி விலை அதிகரிப்புகளைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. நிலைமை ஓரளவு சீராகும் என்பதே எமது நம்பிக்கை. ஒருவேளை அவ்வாறு சீராகாவிட்டால், மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலைத்திருத்தத்தின் போது, மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிலான விலை அதிகரிப்பைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.


















