படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர். தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொதுச் சுடரேற்றியதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

போர் சூழலில் யாழிலிருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றியிருந்த நிலையில், 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















