இ.கலைஅமுதன், கஜிந்தன்
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதியொன்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பி.ஏ.தம்பி வீதி பகுதியில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் நேற்று கொட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாநகர சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிஸார் வருகைதந்த நிலையில் மருத்துவக் கழிவுகளுக்குள் காணப்பட்ட பற்றுச்சீட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த வைத்தியசாலையை தட்டாதெருச் சந்திப் பகுதியில் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ளதை இனங்கண்டு வைத்தியசாலை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


















