-கஜிந்தன், பா.பிரதீபன்-
யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே நாளில் ஜஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை, மூளாய் – வேரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் பொன்னாலை தெற்கு, சுழிபுரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2 அரைக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளினை பயன்படுத்துவோருக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் செயற்பட்டு வந்த 27 வயதுடைய குறித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் நல்லூர் அரசடிப்பகுதியில் 570 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















