-க.சபேஷன்-
இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் ஒருவரின் வீடு நேற்று யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய முளவை சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது.
அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் தனது பிறந்தநாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சோதனையின்போது வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் அங்கிருந்து, இரண்டு மோட்டார்சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


















