யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு ஆயிரத்து 174 குடும்பங்களுக்கு 2007 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக , மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் கீழ், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் வீடமைப்புத் திட்டத்தை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பலாலி வடக்கு ஆரோக்கிய மாதா தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்க பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் இவ்வாண்டு 93 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் மாவட்ட செயலர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெயர்வின் பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு இந்த வீட்டுத் திட்டத்தின் ஊடாக வீடுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் வழிகாட்டலிலும் முன்மொழிவிலும், வீட்டுத் திட்டத்திற்கான நிதியுதவி 15 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது, இந்நிதி அதிகரிப்பைப் பெறும் முதலாவது பயனாளிகளாக இங்கு வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் அமைந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் 833 குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதம் 1,666 மில்லியன் ரூபாவும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக மேலும் 341 குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் 341 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மொத்தமாக 1,174 குடும்பங்களுக்காக 2,007 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைத்து வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் இதற்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்த மாவட்ட செயலர், வழங்கப்பட்ட நிதியைப் பயனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி மகிழ்ச்சியானதும் பாதுகாப்பானதுமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரிவின் மேலதிகச் செயலாளர் E.M.S.B. ஜெயசுந்தர, மீள்குடியேற்றப் பிரிவின் பணிப்பாளர் K.G.P.P. அபேசிறி குணவர்த்தன, திட்டமிடல் மற்றும் மீள்குடியேற்றப் பிரிவின் பணிப்பாளர் D.L.D. பிரியங்கா, மேலதிக மாவட்ட செயலர் பா. ஜெயகரன்,, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பயனாளிக் குடும்பங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

















