-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த வகையிலும் மேற்கொள்வது பற்றிய சமகால அரசின் கொள்கைக்கமைய, போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு மூலம் பிரதான நகரத்திற்கு வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய பேரூந்து சேவை, புகையிரத சேவை, வாடகை வாகன சேவை போன்ற போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் அதிகளவில் பயணிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள பேருந்துத் தரிப்பிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்களை இணைப்புச் செய்து முறைசார்ந்த சாத்தியவள ஆய்வை மேற்கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்காணும் பல்வித போக்குவரத்து மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கண்டி, அனுராதபுரம் (தெற்கு) அநுராதபுரம் (வடக்கு), கொழும்பு கோட்டை, மொரட்டுவ, றாகம, அவிஸ் ஸாவெல காலி, கட்டுநாயக்க, குரநாகல், கம்பஹா, களுத்துறை போன்ற இடங்களிலும் பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது.


















