அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும், இதனால் இந்த நிதி ஒதுக்கிடு தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம். இதனால் அந்த தேடலை செய்ய வேண்டும்.
இதேவேளை இந்த அனர்தத்தில் வடக்கு மாகாணத்தில் பாதிப்பு ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தாலும் கிளிநொச்சி, வவுனியா, மன்னாரில் அதிகமாக இருந்தது. இந்த அனர்த்தங்கள் நடந்துகொண்டிருந்த போது இந்த அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தொடர்பில் பல விமர்சனங்கள் இருக்கின்றன. யாழில் மிகக்குறைவான பாதிப்புகள் இருந்த இடத்திலேயே முன்னுரிமை வழங்கப்பட்டு கூட்டங்கள் நடந்தன. வடக்கு, மாகாணத்தில் மற்றைய மாகாணங்களில் இந்தக் கூட்டங்கள் நடக்கவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அரசாங்கம் விரும்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் 14,459 வீடுகள் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக 361 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் நாங்கள் ஆழமாக யோசித்தால் நெடுந்தீவில் 2024ஆம் ஆண்டில் 893 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இருக்கின்றது. ஆனால் 1216 வீடுகள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் 30 மில்லியன் 4 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில முரண்பாடுகள். இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்று கூறவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் இதில் ஊழல் நடக்கக்கூடாது. இதனால் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
















