-8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது-
-இ.கலைஅமுதன்-
யாழ்.நகர் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது.
இரண்டு பிரதான சந்தேகநபர்களிடம் இருந்து ஆறு கிராம், இரண்டு கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டதுடன் ஏனையவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன சிறியளவில் மீட்கப்பட்டது.
கைதானவர்கள் யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றனர்.















