யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மக்களின் காணிகளை உடன் விடுவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்புக் காரணிகளின் நிமித்தம் தச்சங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதி திறக்கப்படாமல் உள்ளது. இந்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை நிர்மாணிப்பது பற்றி பேசப்படுகிறது. இந்த வீதி பற்றி அண்மையில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த வீதி அபிவிருத்திக்குரிய நிதியை ஒதுக்கீடு செய்ய பாதுகாப்பு அமைச்சினால் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு ஆவண செ ய்ய முடியுமா? வவுனியா பொலிஸ் நிலையம் மாநகரசபைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளது.
அதேபோல் ஈச்சன்குளம் மாவீரர் துயிலும் இல்லம் உள்ள காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. செட்டிக்குளம் பகுதியில் பொதுக் காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து கைப்பற்றிக்கொண்டிருப்பது முறையற்றது.
ஆகவே இந்த காணிகளை விடுவிக்க வேண்டும். எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியுமா எனக்கேள்வி எழுப்பினார்.


















