-நில உரிமையை உறுதி செய்ய தீர்மானம்-
-வி.சரவணன்-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்கப்படும் இடத்தின நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஷ;வரன் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்துமூல அறிவித்தலை வழங்கினார்.
தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு தமிழ் மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அடாவடித்தனமாக அத்துமீறி உள்நுழைந்து உப்பளம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுட்டனர்.
எனவே, குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக உரிய தரப்பினருக்கு அழுத்தங்களை வழங்கிவந்தார். இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு மாவட்ட செயலர் எழுத்துமூலமான அறிவிப்பை வழங்கினார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 23.02.2026 அன்று கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளை மாவட்ட செயலகத்திற்கு அழைத்துச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்த அத்துமீறிய செயற்பாடுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த அத்துமீறல் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கவனஞ்செலுத்துமாறு கடந்த 25.02.2026 அன்று வடக்கு மாகாண ஆளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன், கடந்த 26.02.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவிடமும் நேரடியாக கடிதமொன்று கையளிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து 27.02.2026 அன்று குறித்த குஞ்சுக்கால்வெளி பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அங்கு அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்களின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அதே தினத்தில் கொக்குத்தொடுவாய்பகுதி தமிழ் மக்களுடனும், காணி உரிமையாளர்களுடனும் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவி பிரதேசசெயலாளர் ஆகியோரிடம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்தொள்ளுமாறு கடந்த 07.03.2026 அன்று மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன், குறித்த கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லா ல்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் தொடர் அழுத்தத்தினையடுத்து குறித்த உப்பளம் அமைக்கப்படும் இடத்தின் நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கடந்த 10.03.2026 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு எனத் தலைப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் குஞ்சுக்கால்வெளி தொட்டப்பனிக்கட்டி பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு, முறையான அனுமதியின்றி உப்பளம் அமைப்பதற்காக மகாவலி அதிகார சபையினால் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் தனியார் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் உங்கள் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, நில அளவைத் திணைக்களத்தின் பதிவுகளின்படி, கேள்விக்குரிய இப்பகுதியில் TOPO PP70 வரைபடத்தின் Inset இலக்கங்கள் 17, 18 மற்றும் 19 ஆகியவற்றுக்குள் உள்ளடங்கும் தனியார் காணிகளும், அவற்றுக்கு இடைப்பட்ட மேய்ச்சல் நிலங்களும் காணப்படுவது அவதானிக்கப்பட்டது. இப்பகுதியில் மேலும் தவறான புரிதல்களையும் பதற்றத்தையும் தவிர்ப்பதற்காக, தற்போது உப்பளங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்கும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம். இதன் மூலம் இவ்விடயம் வெளிப்படையான மற்றும் சட்டபூர்வமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய முடியும் – என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















