ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடுமென தெரிவித்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடுமெனவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கோணத்தில் பார்க்க முடியாது. பாதாளக் குழுக்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பிட்டவையாகும். தற்போது செயற்பாட்டில் இருக்கின்றன. இருந்தபோதும், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெறுகிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே எதிர்க் கட்சிகளிடமிருந்து விலகி தனித்து செயற்பட ஆரம்பித்து விட்டேன். 15 வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் செயற்பாடுகளினால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டதாலேயே அவர்களிடமிலுருந்து விலகி வந்தேன். அதனால், மீண்டும் அவர்களுடன் இணைந்துகொள்ளுமளவுக்கு நான் முட்டாள் இல்லை.
மீண்டும் அவர்கள் ஆட்சிகிடைக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். 75 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை. பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை கட்டியெழுப்புகின்ற வகையில்; நாட்டை கட்டியெழுப்பவில்லை. மீண்டும் இவர்கள் கூறும் தேவதை கதைகளை நம்பி ஆட்சியாளர்களாக்குமளவுக்கு மக்கள் முட்டாள்களாவார்கள் என்றால் எப்போதும் தற்போதுள்ள பிரச்சினைகளுடனே வாழ வேண்டியவரும்.
ஒருவேளை, ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பே வெளியிட நேரிடும். மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போயிவிடும். ராஜபக்ஷக்களின் ஆட்சி மீது கோபம் எதுவும் இல்லை. அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன் என்றார்.


















