இ.கலைஅமுதன், பா.பிரதீபன்
வலி.வடக்கு வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் நேற்று செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று, உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று, வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர்.
அதன் பின்னர் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார்.
ஏற்கனவே ஆங்கு கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கூறி வலி.வடக்கு பிரதேச சபையினால் அறிவுறுத்தல் கடிதம் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு பதில் கடிதமும் சபைக்கு இதுரை கிடைக்கவில்லை. இன்னிலையில் 14 நாட்கள் கால அவகாசம் முடிந்த பின்னர் அக் கடிதம் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் யாழ்.தினக்குரலுக்கு நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த வைத்தியசாலை கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுவரும், காணிகளின் உரிமையாளர்கள் தனியாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவும் தீர்மானித்துள்ளதால், இவ்விடயம் தொடர்பில் இரு வழக்குகள் (வலி.வடக்கு பிரதேச சபை மற்றும் காணி உரிமையாளர்களால்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஏற்கனவே ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


















