-த.சுபேசன்-
விசமிகளின் செயற்பாட்டினால் வடக்கு மாகாணத்தில் மரத்தை நடுகை செய்து அதனைப் பராமரிப்பது கூட சவாலாகியுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.
கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை திறந்து வைத்து உரையாற்றிய போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
கிறீன் லேயர் அமைப்பு மிகப் பெரிய வேலைத் திட்டத்தை வடக்கில் முன்னெடுத்து வருகின்றது. அந்த அமைப்பின் நிறுவுனர் சசிக்குமார் தனி ஒரு நபராக மர நடுகைத்; திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார்.அவர் இங்கு தனது கிறீன் லேயர் அமைப்பின் அலுவலகத்தை திறப்பதற்கு முன்னரே, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் மரம் நடுகையை மேற்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் பல தரப்புக்களாலும் மரம் நடுகை செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றை பராமரிப்பதில் ஒரு சில தரப்புக்கள் வெற்றியடையவில்லை. ஆனால் கிறீன் லேயர் அமைப்பு மர நடுகையை மாத்திரம் முன்னெடுக்காமல் அவற்றைப் பராமரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
விசமிகளின் செயற்பாட்டினால் வடக்கு மாகாணத்தில் மரத்தை நடுகை செய்து அதனைப் பராமரிப்பது கூட சவாலாகியுள்ளது.மரத்தை வெட்டுகின்றார்கள், அதன் பாதுகாப்புக்கு போடப்பட்ட கூடுகளை திருடிச் செல்கின்றார்கள், மரத்துக்கு அடியில் நெருப்பு வைத்து எரிக்கப்படுகின்றது. இப்படி மோசமான செயல்களைச் செய்வதால் மரத்தை பாதுகாப்பது என்பது பெரும் சவாலாகவுள்ளது என்றார்


















