-ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை வழங்கிவிட்டார்-
-நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுக்காது – அமைச்சர் சந்திரசேகர்-
-சொ.வர்ணன்-
மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் இ.சந்திரசேகர், நினைவுகூரலுக்கான உரிமையை அரசாங்கம் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தங்கள் உறவுகளை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உள்ளது.
அந்த உரிமையை அரசாங்கம் மறுதலிக்கப்போவதில்லை, நினைவுகூரலுக்கான உரிமையை நாம் தடுக்கப்போவதில்லை. கடந்தகால அரசாங்கங்கள் மாவீரர் நாள் நினைவேந்தல்களை தடுத்தார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் இடையூறுகளை விளைவித்தார்கள்.
ஆனால், நாங்கள் அவ்வாறு எதனையும் செய்யப்போவதில்லை. மாவீரர்களான தங்கள் பிள்ளைகளை நினைவுகூருவது பெற்றோர்களின் உரிமை. அதனை நாம் எப்படி தடுக்க முடியும்? நூங்கள் நினைவுகூரலுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஆவற்றை விடுவிப்பதற்கான பணிப்புரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக, மக்களுடைய அல்லது மக்களுக்கு உரித்தான காணிகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார். அதன் விளைவாக வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு தரப்பிடமிருந்த பொதுமக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் ஜனாதிபதி வடமாகாண மக்கள் வழங்கிய ஆணைக்கு பிரதி உபகாரமாக அபிவிருத்திக்கென பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்துள்ளார். 2026ம் ஆண்டுக்கான பாதீட்டிலும் வடமாகாண அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீட்டை, ஜனாதிபதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


















