கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு இப்போதும் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்குகின்றீர்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் இன்றும் தட்டுப்பாடாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு போரால் உலகளவில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இது இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என்று எண்ணி மக்கள் கடந்த சில நாள்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எரிபொருள் வழங்குகின்றீர்கள்.
இங்கு சபையில் பாராளுமன்ற முதல் வரிசை, இரண்டாவது வரிசையில் அமைச்சர்கள் ஒருவருமில்லை. அப்போது நாம் யாரிடம் கேள்வி கேட்பது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.


















