வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை அநுர அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாட்டில் சமத்துவமான, சட்டவாட்சி நடப்பதாக இருந்தால் படுகொலைகளுக்கு நீதி வழங்கவேண்டும் எனவும் கூறினார்.
மட்டக்களப்பு – மகிழடித்தீவு படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மகிழடித்தீவு படுகொலை நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கொக்கட்டிச்சோலை மற்றும் மகிழடித்தீவு ஆகிய இரண்டு கிராமங்களில் 1987ம் ஆண்டிலும் 1991ம் ஆண்டிலும் 180க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இங்கு இருக்கின்ற இராணுவத்தினர் அதிரடி படையினரின் மூலமாகத்தான் படுகொலைகள் நடைபெற்றது.
இது நாடறிந்த விடயம் வெட்ட வெளிச்சமாக பல சாட்சியங்கள் முன்னாக நடைபெற்ற இந்த படுகொலைகள் இருந்தும் கூட இதுவரைக்கும் அந்த மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை நீதி கிடைக்கவில்லை. பட்டப் பகலில் பல கண்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட இந்த படுகொலைகள், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்திலும், பிரேமதாசா அவர்களின் ஆட்சி காலத்திலும் இடம்பெற்றன.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராக இருந்தார், பிரேமதாசா ஆட்சி காலத்தில் ரஞ்சன் விஜயரத்தின பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இந்தக் காலத்தில் வகை தொகை இல்லாமல் அதாவது 3 வயது குழந்தையில் இருந்து பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் மற்றும் இளைஞர்கள் என்கின்ற பேதம் இல்லாமல் அனைவரும் தமிழர்கள் என்கின்ற காரணத்திற்காக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டும் கூட எத்தனை அரசாங்கங்கள் மாறி இருக்கின்றன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, டிங்கிரி பண்டா விஜயதுங்க, மஹிந்த ராஜபகஷ, கோத்தபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க இப்போது அநுர குமார திசாநாயக்க வந்திருக்கின்றார். ஆகவே இவர் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட நீதியின் பக்கமாக அவர்கள் கண் திறக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது.
இப்போது இறுதியாக அநுரகுமார திசாநாயக்க வந்திருக்கின்றார் அவருடைய காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றோம். கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதும் கொன்றவர்கள் இராணுவத்தினர் அதிரடிப் படையினர் என்பதும் வெளிப்படையான உண்மை.
அந்தக் காலத்தில் இங்கு பணிக்கு வந்தவர்கள் இந்த பொறுப்புக்குரியவர்கள் யார் என்பது அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். எனவே சட்டவாட்சி சமத்துவமான ஆட்சி என்று சொன்னால் இந்த கொல்லப்பட்ட மக்களுக்குரிய நீதி அல்லது அவர்களுக்குரிய தீர்ப்பு என்பது கிடைக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் மிகவும் மன வேதனையுடன் கூறிக் கொள்கின்றேன்.


















