-உறுதியளித்தார் அநுர-
வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சி – ஜனாதிபதி இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாகாணசபை தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராயப்பட்டதுடன்,
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வினை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்பிடி மற்றும் காணிப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறியுள்ளனர். அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என எம்.ஏ. சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.


















