-த.அம்பிகாவதி-
வட மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்படுதல் வேண்டும். இதற்கு திணைக்களத் தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படுதல் வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்ற வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனியே யாழ். மாவட்டம் மாத்திரம் வட மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்ய வேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் ஒரு மாத காலத்தினுள் தயார் செய்யப்பட வேண்டும். திட்டங்கள் தயாரிக்கப்படும்போது திணைக்களத் தலைவர்கள் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதன் தேவைப்பாடுகளை உரியவாறு மதிப்பீடு செய்யவேண்டும். திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
வாழ்வாதார உதவிக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அதன் நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை. எனவே அவ்வாறான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது கூடுதல் அவதானம் தேவை. குறிப்பாக மத்திய அரசாங்கத்தாலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிக்கு மேலதிகமாக தூய்மை இலங்கை செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக மேலதிக நிதியைப்; பெற்றுக் கொள்ளலாம். எனவே, அதற்குரிய திட்டங்களையும் திணைக்களத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.
மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிப் பங்கீடு செய்யாமல் எந்தப் பிரதேசங்களுக்கு தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.
கடல் கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.


















