டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு – தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கவும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் புலதிசி கடுகதி ரயில் மற்றும் உதயதேவி ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான இரவு தபால் ரயில் சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை – காங்கேசன்துறை வரையும் யாழ். ராணி ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.


















