வடக்கு, கிழக்கில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து சேவையை முழுமைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்போது சாரதி மற்றும் நடத்துனர் வேலைவாய்ப்புக்காக நேர்முகத் தேர்வுகள் நடக்கின்றன. இந்த பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களை இந்த சேவையில் இணைப்பதால் அதனை நிவர்த்தி செய்ய முடியும். அதேபோன்று போக்குவரத்தில் பழைய பேருந்துகள் இயங்குவதுடன், பேருந்துகளுக்கான தட்டுப்பாடுகளும் நிலவுகின்றன. இதனால் அதனை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நெடுஞ்சாலைகளை அமைக்கும் போது பழுதடையாத வகையில் முறையாக அதனை முன்னெடுக்குமாறு கோருகின்றேன்.
இதேவேளை மட்டக்களப்பு வலையிறவ விமானசேவை தளத்தில் பாதையொன்று மூடப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதன்போது அந்த பாதையை திறந்துவிடவுள்ளதாக கூறப்பட்டது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்துள்ளன. இன்னும் பாதை திறக்கப்படவில்லை. இதனால் அதனை துரிதமாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன். அத்துடன் விமான வளாக விஸ்தரிப்பின் போது.காணிகளை இழந்தவர்களுக்கு பதில் காணிகளை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.















