-க.கனகராசா-
வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்த வண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின் அளவு கணிசமான அளவு குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரணைமடு குளமானது நேற்று முன்தினம் 40 அடி 3 அங்குலமாக காணப்பட்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டமானது, நேற்று மாலை 5 மணியளவில் 37 அடியாக குறைவடைந்துள்ளது. குளத்துக்கான நீர் வரத்து மணித்தியாலத்துக்கு 0.794 மில்லியன் கன மீற்றராக குறைவடைந்துள்ளதுடன், ஆரைக்கதவுகள் படிப்படியாக மூடப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதே அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள வெலிமருதமடு குளம் மற்றும் கூராய்க்குளம் என்பன உடைப்பெடுத்துள்ளன. வெலிமருதமடு குளத்துக்கு மேலுள்ள பெரியமடு குளத்தின் வான் நீர் பெருமளவில் வந்தமையே இதற்குக் காரணமாகும். அதேவேளை, பறங்கியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கூராய்குளம் உடைப்பெடுத்துள்ளது.
மேலும், அதிக மழைவீழ்ச்சி மற்றும் வான் பாய்தல் காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு, வவுனியா குளம், மகாகச்சகொடிய குளம், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முத்துஐயன்கட்டு குளம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு ஆகியவற்றின் வான் பாதையிலுள்ள தடுப்பணைகள் உடைப்பெடுத்துள்ளன. முத்துஐயன்கட்டு குளத்தின் வான் கதவுகள் மூடப்பட்டுள்ள போதும், வான் பாதையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக என்று அந்த அறிக்கையில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


















