திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கழமை வெல்வேரி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்ட பட்டணமும் சூழலும் பிரதேச செயலக்திற்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தோம். குறித்த மக்கள் பல வருடங்களுக்கு முன்னர் வன்செயலின் காரணமாக இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இந்நிலையில் தற்போது அவர்களுடைய வாழ்வாதார பிரச்சினை எழுந்திருக்கின்றது.
குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோது இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் போதியளவு காணப்படுகின்றன. அங்கு விவசாயம் மேற்கொண்டதற்கான கிணறுகள், வயல்நிலங்கள், எஞ்சிய கட்டுமானங்கள் போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் இவற்றுக்கான ஆவணங்களையும் குறித்த மக்கள் வைத்திருக்கின்றார்கள் எனவே இவை போதுமானவையாக இருப்பதாக நம்புகின்றேன். இந்த அடிப்படையில் பல்வேறுபட்ட இடங்களில் வன பரிபாலன திணைக்களத்திடமிருந்து காணிகளை விடுவித்து மக்களுக்கு கொடுத்திருக்கின்றோம்.
அந்தவகையில் வெல்வேரி மக்களுடைய காணிகளையும் விரைவில் வன பரிபாலன திணைக்களத்திடமிருந்து விடுவித்து மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பின் காரணமாக மீண்டும் மீள குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த பகுதியில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் மக்களின் காணிகள் எல்லைக் கற்கள் இடப்பட்டு கையகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















