முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஷ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் நாட்டின் ஏனைய பாகங்களைப் போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும், சமச்சீரான முறையிலும் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை வடக்கு மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு நேர்முகத் தேர்வில் பங்குபற்றி நியமனம் வழங்கப்பட்டு பின்னர் இரத்துச் செய்யப்பட்ட சுகாதார உழியர்கள் 454 பேரையும் 2026 ஆம் ஆண்டில் மீள ஆட்சேர்ப்புச் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் வரவு – செலவுத்திட்ட சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஷ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கையை இன்றும் எனது முதல் கோரிக்கையா முன்வைக்கிறேன்.
நாங்கள் அதிகமாக கேட்கவில்லை. ஏனைய மாவட்டங்களை விடவும் கூடுதலான வசதிகளை தாருங்கள் என்று கேட்கவில்லை. இந்தத்தீவிலே ஏனைய அனைத்து மாவட்ட பொது மருத்துவமனைகளுக்குமான வசதிகளை எங்கள் மாவட்ட பொது மருத்துவ மனைகளுக்கும் கிடைக்கச் செய்யுங்கள் என்றே கேட்கின்றோம்.
பௌதீக வளப் பற்றாக்குறை, மனித வளப் பற்றாக்குறை, நலிவுற்ற போக்குவரத்து வசதி, சம்பளமற்ற விடுகை மற்றும் இணைப்பு மூலமான செயலற்ற ஆளணி மிகுதல் என்பன வன்னிமாவட்டத்தின் சுகாதாரத்துறையின் தரமான சேவை வழங்கலுக்கு சவாலாகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார சேவை வழங்கலில் உள்ள நோயாளர் காவு வண்டிகள் 22 இல் 18 வண்டிகளும் 12 இருவரிசை இருக்கைகொண்ட ஊர்திகளில் 5 ஊர்திகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்த உழைப்பைக் கொண்டன. இதனால் வாகனங்களுக்கான வருடாந்த திருத்தச் செலவு உயர்வதோடு அடிக்கடி திருத்தத் தேவைகளுக்கு உள்ளாகுவதால் உடனடி நோயாளர் பரிமாற்றங்களும் முல்லைத்தீவில் கேள்விக்கு உள்ளாகிறது.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவை வழங்கலின் தரமேம்பாட்டுக்கு புதிய நோயாளர் காவு வண்டிகள் இரண்டேனும் 2026 இல் வழங்க முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

















