தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனுக்கு வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திலீபனின் 38ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவுதினம் நினைவுகூரப்பட்டது.
அவசர காலச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருதல், வீதியோர இராணுவ முகாம்களை அகற்றல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்களுக்காக நல்லூரின் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 அன்று திலீபன் உயிர் துறந்தார்.
இந்த நிலையில் தமிழர் தாயகமெங்கும் தமிழர் வாழும் தேசமெங்கும் இன்று தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்ப்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

அதேவேளை வற்றாப்பளையில், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட் பிரசாத் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
அதேபோன்று முள்ளியவளை பிரதேசத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
வவுனியாவில் நினைவேந்தல்
வுவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தியாகி திலீபனின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியடியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.


















