வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது
வன்னி மாவட்டத்தில் 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் திகதி வனப் பாதுகாப்பு இடங்களாக கிட்டத்தட்ட 30 இடங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தது. குறிப்பாக 30 வருட கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வும், அதன் பின்னரான காலத்தில் தங்களது இடங்களுக்கு மக்கள் மீள்குடியேறியும் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மூலமாக வடக்கு – கிழக்குப் பகுதிகளிலே அளவீடுகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு அளவீடு மேற்கொள்ளும்போது மீள்குடியேறிய மக்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிலங்கள் என்பனவும், வனப் பிரதேசங்களிற்கு உள்வாங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கே பாரிய ஒரு காணி பிரச்சினை காணப்பட்டது. இதனால் குறித்த திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே இதற்கான உரிய தீர்மானங்களை மேற்கொண்டு வன்னி நிலப்பரப்பிலே 101,762.75 நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம். அதில் வவுனியா மாவட்டத்திற்கு 22,804.40 ஏக்கர் நிலமும், மன்னார் மாவட்டத்தில் 178,82.8 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்திலே 48,532.6 ஏக்கர் நிலங்களையும் விடுவிக்கப்பட இருக்கின்றது.
ஆனால் இவ்வாறு நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும் பிரச்சினைகள் மேலும் இருக்கின்றது என்பதை நாங்கள் தற்கால மேற்பார்வைகளின் மூலம் இனம் கண்டிருக்கின்றோம். எனவே அதனையும் தீர்க்கும் முகமாக நாங்கள் அமைச்சரவை மட்டத்திலே கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஒரு அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருந்தோம். அதாவது அந்த அமைச்சரவை தீர்மானத்தின்படி இந்தக் காணிகளை விடுவிப்பதில் வன வள திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்தக் காணிகளை விடுவிப்பதற்காக அனைத்து திணைக்களங்களும் உள்ளடங்கலாக ஒரு விசேடமான ஒரு குழுவினை நாங்கள் நியமித்திருக்கின்றோம்.
இதனை விட மாவட்ட அடிப்படையிலே மாவட்ட செயலாளர்கள் உட்பட அந்த அனைத்து திணைக்களங்களையும் உரிய பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மாவட்ட மட்டத்திலே காணப்படுகின்ற காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளை சேகரித்து இந்த பிரதான குழுவிடம் ஒப்படைக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக இந்தப் பிரதேசத்திலே மக்களுக்கு விடுவிக்கப்படவேண்டிய காணிகளை சரியான முறையிலே இனங்கண்டு அவற்றை விடுவித்து ஏனைய காணிகளை அதாவது ஏனைய வனப்பகுதியை நாங்கள் வனப்பகுதியாக பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் 2030ஆம் ஆண்டு அளவிலே கிட்டத்தட்ட 32 வீதம் காடுகள் இலங்கை நாட்டிலே காணப்பட வேண்டும். அவ்வாறு இருக்கின்ற பட்சத்திலே தான் ஒரு இயற்கை சமநிலை எங்களது நாட்டிலே பேணி பாதுகாக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.
எனவே இந்த விடயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றோம். எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்தவரையிலே பிரதான பிரச்சினையாக காணப்படுகின்ற இந்த காணி விடுவிப்பு அதாவது வனவள திணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்ட காணிகளை நிச்சயமாக மக்களுக்காக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி நாங்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்

















