-இ.கலைஅமுதன்-
இந்த வரவு – செலவுத் திட்டத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பொருட்களின் விலை குறையவில்லை. பாடசாலை உபகரணங்களுக்கான வரியைக் குறைக்குமாறு நாங்கள் கூறியிருந்தோம். கடந்த வருடமும் குறைக்கப்படவில்லை. இந்த வருடமும் குறைக்கப்படவில்லை. அடிமட்ட மக்களுக்கு எதுவுமே இல்லாத வரவு – செலவுத் திட்டம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டத்தில் நூற்றுக்கு ஆறு வீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் எனப் போராடிய ஹரிணி அமரசூரியவே தற்போது கல்வி அமைச்சராக உள்ளார். அரசுக்கு வந்த பின்னர் இரண்டாவது வரவு – செலவுத் திட்டம் வந்துள்ளது. நூற்றுக்கு ஆறு வீதத்தை கல்விக்கு கொடுப்பதற்கு என்ன செய்துள்ளார்கள். தற்போது கூட நூற்றுக்கு ஒன்று தசம் வரையானவையே கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. வரவு – செலவுத் திட்டத்தில் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கினாலே கல்வியை சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.
ஆசிரியர், அதிபர்களின் விடயத்தில் சம்பள முரண்பாடு காணப்படுகிறது. இதற்கான ஒரு தீர்வு காணப்பட வேண்டும். 97 ஆம் ஆண்டிலிருந்து இந்த முரண்பாடு காணப்படுகிறது. இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்காக சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. ஆனாலும் தீர்வு காணப்படவில்லை.
தற்போதைய அரசாங்கத்தில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த காலங்களில் ஆசிரியர்களாக போராடி பாராளுமன்றத்திலும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
ஆசிரியர்களின் போராட்டத்தால் வந்த அரசாங்கம் தற்போது ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை கூட பேச வேண்டாம் என சொல்வது எவ்வளவு பெரிய அநீதியானது.
ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. 36,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. 75 ஆயிரம் அரச ஊழியர்களை எடுப்பதாக சொல்கின்றார்கள். எல்லா மாகாணங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.
பட்டதாரிகள் யாரும் வீதிக்கு வர வேண்டாம் என அரசு சொல்கிறது. வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் என பல தொழிற்சங்கங்கள் இணைந்து போராடியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது.
கஷ்டப் பிரதேச கொடுப்பனவு 1500 ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது போதுமா? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















