சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக அமையும் என நகரசபைத் தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் ஊடாக பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆதேபோல் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.
வரவு – செலவுத் திட்டத் தயாரிப்பை இலகுபடுத்தும் முகமாக சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மக்களுக்கு நிறைவான சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
சபையின் முடிவே இறுதியானது. அது தொடர்பில் உறுப்பினர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. வட்டாரத்தின் உறுப்பினர்களுடைய பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு அபிவிருத்தியை மேற்கொள்வோம்.
தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகின்றது. இந்த ஆட்சியில் மக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. நாமும் மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அபிவிருத்திகளை முன்னெடுப்போம்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டிற்கான மிகுதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் விரைவில் முன்னெடுக்கவுள்ளோம். எம்மால் முடிந்த சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரதும் இலக்கு.2026 ஆம் ஆண்டிற்கான எமது முதலாவது பாதீட்டை எந்தவொரு தவறும் இன்றி அனைவரது எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் விதமாக தயாரிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


















